விதிமுறைகளை மீறி கட்டப்படும் பேனர்கள்.. பாராமுகம்!; உயிர்பலி வாங்கியும் கண்டுகொள்ளாத நிலை
ராஜபாளையம்; விதிகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுவது தொடர்கதை ஆகிய நிலையில் இரண்டு நாள் முன்பு சேத்துாரில் உயிர் பலி ஏற்பட்ட பின்னரும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.விளம்பர பேனர்கள் சாலையோரம் வைக்கப்படுவதால் ஏற்படும் அபாயம் குறித்து பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் டிரான்ஸ்பார்மர் ஒட்டியும் மின்கம்பங்களில், கடைகளை மறைத்து, மெயின் ரோடு சந்திப்புகளில் என வைக்கப்பட்டு வருகின்றன.இதற்கென விதிமுறைகள் வகுக்கப்பட்டு விதிகள் மீறினால் அபராதம் சிறை என சட்டம் தெளிவாக வகுத்துள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் பிளக்ஸ் போர்டு வைப்பது அதிகரித்து வருகிறது.விளம்பர போர்டுகள் கழற்றி மாட்டும் போது மின்கம்பிகளில் பட்டும் வாகன ஓட்டிகளில் மீது பலத்த காற்றில் சரிந்து விழுந்தும் அடிக்கடி உயிர் பலிகள் ஏற்பட்டு வந்தன.நீதிமன்றம் இது குறித்து கண்டனம் தெரிவித்த நிலையில் பிரதான கட்சிகள் பிளக்ஸ் போர்டு வைக்காததுடன் வைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் ஒப்புதல் பிரமாண பத்திரம் வழங்கியது.இருப்பினும் ராஜபாளையத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, சந்திப்பு ரோடுகள், பழைய பஸ் ஸ்டாண்ட், சொக்கர் கோயில், நேரு சிலை, சங்கரன்கோயில் முக்கு போன்ற இடங்களில் பேனர்கள் வைப்பது தொடர்கிறது.அஞ்சலி பிளக்ஸ்களும், அரசியல் கட்சியினரின் சார்பில் வரவேற்பு, வாழ்த்து, தனியார் நிறுவன விளம்பரங்கள் என வைக்கப்படுகின்றன.இவற்றால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் கவனிச்சிதறல் ஏற்பட்டும், சாலை மறைப்பதால் ஏற்படும் சிக்கல் என அப்பாவிகள் பாதிக்கின்றனர்.போலீசாரும் உள்ளாட்சி நிர்வாகங்களும்கண்டுகொள்ளாததால் விதி மீறல்கள் தொடர்கிறது. இரண்டு நாள் முன்பு சேத்துாரில் திருமண நிகழ்விற்கு பிளக்ஸ் போர்டு கட்டும்போது கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த பின்பும் மின்கம்பங்களில் பிளக்ஸ் போர்டு கட்டுவதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். மாவட்டம் நிர்வாகம் அனுமதியின்றி பிளக்ஸ் வைப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிர் பலி வாங்கும் பிளக்ஸ் கலாச்சாரம் கட்டுக்குள் வரும் என மக்கள் கருதுகின்றனர்.