உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கட்டியும் பயனில்லா மின்மயானம், சேதமான ரோடு

கட்டியும் பயனில்லா மின்மயானம், சேதமான ரோடு

காரியாபட்டி : கே. கரிசல்குளம் கண்மாய்க்கு செல்லும் வரத்து ஓடை தூர்ந்து, குப்பைகள் தேங்கி கிடப்பதால் தடை படும் மழை நீர், ரூ. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட மின் மயானம் பயன்பாடு இன்றி கிடப்பது, பெரும்பாலான வீதிகளில் போடப்பட்ட தார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுவது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெய்யும் மழை நீர், அரசு மருத்துவமனை, சக்தி மாரியம்மன் கோயில், அமலாபள்ளி வழியாக, கே. கரிசல்குளம் கண்மாய்க்கு செல்ல வரத்துக்கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. வீடுகள் விரிவாக்கம் அடைந்ததால் வரத்து ஓடை காணாமல் போயின. தற்போது சக்தி மாரியம்மன் கோயில் அருகில் இருந்து வரத்து ஓடை உள்ளது. இதில் கழிவு நீர் தேங்குவதுடன் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதியில் பெய்யும் மழைநீர் செல்ல வழி இன்றி தடைபட்டுள்ளது. ஆங்காங்கே செடிகள் முளைத்து புதர் மண்டி, துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் நடந்து செல்லவே அருவருப்பாக இருப்பதாக புகார் தெரிவித்தனர்.ரூ. பல லட்சம் செலவில் மின் மயானம் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ரூ. பல லட்சம் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. செவல்பட்டியில் இருந்து கள்ளிக்குடி ரோடு வரை செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. அதேபோல் அப்பகுதியில் உள்ள வீதிகளில் போடப்பட்ட தார் ரோடு சேதமடைந்து, குண்டும் குழியுமாக இருக்கிறது. வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல்படாத மின்மயானம்

ஆறுமுகம், தனியார் ஊழியர்: காரியாபட்டியில் ரூ. பல லட்சம் செலவில் மின் மயானம் கட்டப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. பழைய எரியூட்டும் மயானத்தில் எரியூட்டப்படுவதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட மின் மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூர் வார வேண்டும்

பாஸ்கரன், விவசாயி: கே.கரிசல்குளம் கண்மாய்க்கு நீர் ஆதாரமாக காரியாபட்டி பகுதியில் பெய்யும் மழை நீர் செல்ல வரத்து ஓடை ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் வீடுகளின் விரிவாக்கத்தால் ஓடை காணாமல் போனது. தற்போது மழை நீர் வீணாக வெளியேறி வருவதால் நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. கழிவு நீர் தேங்குவதால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. தூர்ந்து கிடக்கும் வரத்துக்கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படு மோசமான ரோடு

பாலமுருகன், தனியார் ஊழியர்: பெரியார் நகரில் உள்ள பெரும்பாலான வீதிகளில் போடப்பட்ட தார் ரோடு சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. அதேபோல் கள்ளிக்குடி ரோட்டில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் தார் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ