உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடநெருக்கடியால் ரோட்டில் நிறுத்தப்படும் பஸ்கள் காரியாபட்டியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுமா

இடநெருக்கடியால் ரோட்டில் நிறுத்தப்படும் பஸ்கள் காரியாபட்டியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுமா

காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் 7 பஸ்கள் மட்டுமே நிற்க முடியும் என்பதால் இட நெருக்கடியால் பஸ்கள் ரோட்டில் நிறுத்தப்படுவதால் மக்கள் கடுமையான சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க புது பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டிக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரையிலிருந்து 80க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. விருதுநகர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், டி. கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. ஒரு ஏக்கர் பரப்பளவில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இதில் கடைகளுக்கு போக 7 பஸ்கள் மட்டுமே நிற்க இட வசதி உள்ளது. காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் பஸ்கள் வந்து செல்வதால் பெரும்பாலான பஸ்கள் மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் வெளியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. பயணிகள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து பஸ் ஏற வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. அது மட்டுமல்ல பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரங்கள் என ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகின்றன. பஜாரில் இருந்து செவல்பட்டி வரை பஸ்கள் மற்ற வாகனங்கள் சென்றுவர கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வங்கிகள் உள்ளிட்ட பகுதிகளில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். ஆட்கள் கூட விலகிச் செல்ல முடியாத அளவிற்கு நெரிசலாக இருக்கிறது. சில நேரங்களில் தனியார் பஸ்கள் உரிய நேரத்திற்கு செல்ல வேண்டும் என அதிவேகமாக வந்து செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்து ஏற்படுவதற்கு முன் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டியது அவசியமாகிறது. காரியாபட்டியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். புது பஸ் ஸ்டாண்ட் வேண்டும் பெரிய பாண்டி, விவசாயி: காரியாபட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். அதிக வாகனங்கள் வந்து செல்வதால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ரோட்டோரங்களில் ஒரு வாகனம் சென்றுவர படாதபாடு பட வேண்டியிருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் கூடுதல் பஸ்களை நிறுத்த இட வசதி கிடையாது. மெயின் ரோட்டில் நிறுத்துவதால் மற்ற வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றம் வேண்டும் பாண்டியராஜன், வக்கீல்: மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஊர். வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் பஸ்டாண்டில் போதிய இட வசதி இல்லாததால், புது பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டியது அவசியம். ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன அதனை கண்டறிந்து புது பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும். மேலும் வளர்ச்சி அடைந்து, நகராட்சி அந்தஸ்துக்கு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை