மேலும் செய்திகள்
ஆயுதப்படை போலீசாருக்கு புது தொப்பி
26-Nov-2024
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அத்துமீறும் போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது வாடிக்கையாகி வருகிறது. மற்ற அரசு ஊழியர்கள் இது போன்ற வழக்கில் சிக்கினால் வழக்கு பதிவு செய்வது போல் ஸ்டேஷன் தொந்தரவுகளுக்கும் வழக்குப்பதிந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பது மட்டுமே தீர்வு தரும். மாவட்டத்தில் ஸ்டேஷன்களில் போலீசார் அத்துமீறுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. நவம்பரில் அருப்புக்கோட்டை தாலுகா ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஒருவர் சிறுமியிடம் தனியறையில் விசாரித்தார். இது குறித்து எஸ்.பி., கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு பணி நேரத்தில் போதையில் இருந்த எஸ்.எஸ்.ஐ., ஆயதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் ஸ்டேஷனில் இருந்த போலீசுக்கு தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டேஷன்களில் போலீசார் சிலர் அத்துமீறுவது தொடர்கதையாகி வருகிறது. நவ.ல் அருப்புக்கோட்டை தாலுகா எஸ்.ஐ., சிறுமியிடம் தனியறையில் விசாரித்த விவகாரத்தில் பெண் உயரதிகாரி தலைமையில் விசாரிக்க குழு வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஸ்டேஷன்களில் செயல்படும் விசாக கமிட்டிகளை பலப்படுத்தவும் கோரப்பட்டிருந்தது. முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் ராஜபாளையத்தில் இது போன்று நடந்திருக்காது. அத்துமீறும் எண்ணம் உள்ள போலீசாருக்கு பயம் ஏற்பட்டிருக்கும். போலீசார் என்பதால் வழக்கு பதியாமல், ஆயுதப்படைக்கு மாற்றுவது நியாயமல்ல. இதே குற்றத்தை பிற துறையினரே அல்லது பொதுமக்களோ செய்திருந்தால் போலீசார் நிச்சயம் வழக்கு பதிந்து குற்றவியல் நடவடிக்கை எடுத்திருப்பர். உடனுக்குடன் ஆயுதப்படைக்கு மாற்றுவது தீர்வாகாது. இதை மாவட்ட போலீஸ் நிர்வாகம் உணர்ந்து தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்தால் தான் இனி இது போன்று நடக்காது. அரசு எந்திரத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற நோக்கில் அதிகாரிகள் செயல்படுவது தான் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அத்துமீறும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நேர போதை உள்ளிட்ட பிரச்னைகளை செய்வோருக்கும் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.
26-Nov-2024