திருச்சுழியில் முளைக்காத மிளகாய் பயிர்கள்
திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மிளகாய் பயிர் மழை குறைவாலும், வெட்டுக்கிளிகளின் தொல்லையாலும் பாழானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.திருச்சுழி அருகே ராஜகோபாலபுரம், பொம்மநாயக்கன்பட்டி, வடக்கு நத்தம், தெற்கு நத்தம், தொப்புலாக்கரை உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிரிட்டுள்ளனர். புரட்டாசி மாதத்தில் விதைக்கப்படும் மிளகாய் தை மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். இந்த முறை புரட்டாசியில் பயிரிடப்பட்ட மிளகாய் போதிய மழையின்மையால் முளை விடவில்லை. மேலும், தப்பி தவறி முளைத்த செடிகளை வெட்டு கிளிகள் கூட்டமாக வந்து, செடிகளின் இலைகளை வெட்டி விடுகின்றன. இதனால் செடி பாழாகி விடுகிறது. இதனால், இந்தப் பருவத்தில் மூன்று முறை மிளகாய் விதைத்தும் பலன் இல்லை. ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்தும் பயன் இல்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.தற்போது மீண்டும் விதைத்துள்ளனர். இதற்கு தேவையான மழை பெய்ய வேண்டும். மழை குறைவாக சாரலாகத் தான் பெய்கிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சங்கரபாண்டி: எங்கள் பகுதியில் 3 முறை மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. போதுமான மழை இல்லை. வெட்டுக் கிளிகளின் தொல்லை வேறு. ஜனவரி மாதத்தில் மிளகாய் அறுவடை செய்வர். தற்போது வரை பூமியை விட்டு செடிகள் வளரவில்லை. பெரும்பாலான விவசாயிகள் மூன்று முறை விதைத்தும் பலனில்லை.