பிளஸ் 2 மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்
விருதுநகர்: விருதுநகரில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளியில் 550க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார்.கலெக்டர் அலுவலகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுடனான 176வது 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லுாரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார். அவர்களுடைய லட்சியம், எந்த துறையில் ஆர்வம் உள்ளது குறித்து கேட்டறிந்தார்.கடந்தாண்டு எந்த கல்லுாரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது, நுழைவுத் தேர்வுகள், உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல கல்வியறிவு பெற்று, தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்து பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம்'' என்றார்.