இடிந்து போன மக்கும், மக்காத குப்பைகள் பிளான்ட்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கடமைக்கு கட்டப்பட்ட மக்கும், மக்காத குப்பைகள் பிளான்ட் இடிந்து விட்டதால், குப்பைகள் தெருக்களிலும் ரோடு ஓரங்களிலும் எரிக்கப்படுகின்றன.திடக்கழிவுகளை கையாள்வது ஒவ்வொரு ஊராட்சிக்கும் சவாலாகவே உள்ளது. மத்திய அரசு இதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி, மக்கும் மட்காத குப்பையை தனி தனியாக பிரிக்கும் வகையில் பிளான்ட் அமைக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதியை ஒதுக்கி உள்ளது. ஆனால் ஊராட்சிகள் பேருக்கு மட்கும், மட்காத குப்பைகள் பிளான்ட் அமைத்து கடமையை முடித்துக் கொள்கின்றன. ஊருக்கு வெளியே யாரும் செல்ல முடியாத இடத்தில் இவற்றை அமைப்பதால் குப்பைகளை அங்கு சென்று கொட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவது இல்லை. ஏனோ தானோ வென்று பிளான்ட் அமைத்துள்ளதால் கட்டிய சில மாதங்களிலேயே அவை இடிந்தும் விடுகின்றன.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் தும்பை குளம் கண்மாய் அருகில் லட்சக்கணக்கில் நிதியை செலவழித்து மட்கும் மட்காத குப்பை பிளான்ட் கட்டப்பட்டது. இவை பயன்படுத்தப்படாமலேயே செடிகளும் புதர்களும் முளைத்து சில மாதங்களில் சுவர் இடிந்து விழுந்து விட்டன. இவற்றை முறையாக பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. ஊராட்சியில் உள்ள தெருக்களில் ஆங்காங்கு குப்பை கூட்டி எரிப்பதும் ரோடு ஓரங்களில் குவித்து வைத்து எரிப்பதும் தொடர்கதையாக உள்ளது. புகையினால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர். ஊராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் அக்கறை காட்டுவது இல்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஊராட்சிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.