பாதாள சாக்கடை பணிகளை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு விரைவில் முடிக்கவும்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பாதாள சாக்கடை திட்ட பணிகளை மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு பணியை விரைவில் முடிக்க வேண்டும். என நகராட்சி கட்டத்தில் கவுன்சிலர் புகார் கூறினார். அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பழனிச்சாமி, இன்ஜினியர் அபூபக்கர் சித்திக் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் : பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட் கம்யூ.,) : நகராட்சி கூட்டம் தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை தான் நடக்கிறது என்ன காரணம். பழனிச்சாமி, துணை தலைவர்: தீர்மானங்கள் இருந்தால் மட்டுமே கூட்டம் நடத்தலாம் என்ற நடைமுறை உள்ளது. இனி வரும் காலங்களில் மாதா மாதம் கூட்டம் நடை பெறும். தனலட்சுமி, (தி.மு.க.): மக்களை தேடி மருத்துவத் திட்டம் செயல்படுகிறதா இல்லையா, பெரும்பாலான முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனாட்சி, (தி.மு.க.): கவுன்சிலர்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடந்தாலும் தெரிவிப்பது இல்லை. தெருக்களில் வாங்கும் குப்பைகளை ரோட்டில் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டுவிங்கிளின் ஞான பிரபா, (தி.மு.க.): 5வது வார்டில் புதர் மண்டி கிடக்கும் நகராட்சிக்கான காலி இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும். தெரு விளக்குகள் வேண்டும். கண்ணன், (தி.மு.க.): நேரு நகரில் வாறுகாலை மண்ணை போட்டு மெத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேற்கு பகுதிகளில் தாமிரபரணி குடிநீர் வருவது இல்லை. சிவகாமி, (தி.மு.க.,): நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு பணியை விரைவில் முடிக்க வேண்டும். ராமதிலகவதி, (அ.தி.மு.க.,): பட்டாபிராமர் கோவில் பகுதியில் உள்ள மழைநீர் வரத்து ஓடையை மழை காலத்திற்குள் தூர்வார வேண்டும். செந்தில்வேல், (தி.மு.க.): நாடார் மயான ரோட்டில் முறையான வாறுகால் இல்லாததால் ரோட்டில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இவ்வாறு விவாதங்கள் நடந்தது.