மேலும் செய்திகள்
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
16-Sep-2024
ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுமென சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு டெண்டர் விட்டும் இன்னும் பணிகள் துவங்காததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் பல ஓடைகள் உள்ளன. மழை, ஓடைகளில் நீர்வரத்து ஏற்படும் போது பக்தர்கள் ஏறவோ, இறங்கவோ முடியாமல் தவிக்கின்றனர். எனவே, கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாதையை சீரமைத்தும், நீர்வரத்து ஓடைகளை கடக்க பாலங்கள் அமைத்தும், அபாயமான மலைப்பகுதியில் கைப்பிடிகள் அமைக்கவும் பக்தர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.இந்த பகுதி மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, பிலாவடி கருப்பசாமி கோயில், வெள்ளை பாறை உட்பட 7 இடங்களில் பாலங்கள் அமைக்கவும், கோணத் தலைவாசல், நாவலூத்து, இரட்டை லிங்கம் உட்பட 5 இடங்களில் கைப்பிடிகள் அமைக்கவும் அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்கு அனுமதி கோரி வனத்துறையிடம் 2020ல் விண்ணப்பிக்கப்பட்டது. வனத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.இந்தாண்டு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் திருப்பணி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி ரூ.9 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. ஆனால் இன்னும் பணிகள் துவங்கவில்லை.இந்நிலையில் சென்னையில் அறநிலையத்துறை, வனத்துறை அமைச்சர்கள், இரு துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணிகள் துவங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் மலையேறுவதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.எனவே, விரைவில் வனத்துறை அனுமதி பெற்று திருப்பணிகள் துவங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
16-Sep-2024