வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவக்கம்
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ரூ.5 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியான பிறகு மீண்டும் பணிகள் துவங்கியது. சிவகாசி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட சாத்துார் ரோட்டில் பஸ் ஸ்டாண்டு அருகே வருவாய்துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் நகராட்சி நிர்வாக துறைக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் 1.75 ஏக்கர் நிலத்தில் புதிய அலுவலகமும், மீதமுள்ள இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கு 2023 ஜூனில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி ரூ.5 கோடியில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியது. 18 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், வணிக வளாகம் தரைத்தளம் மற்றும், முதல் தளத்துடன் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கட்டப்பட்டு வந்தது. ஒரு ஆண்டாக வணிக வளாகம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் கட்டடத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறிவிட்டது. கட்டடம் முழுவதுமே காலி மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கப்புகள் கிடக்கிறது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது. கமிஷனர் சரவணன் கூறுகையில், நிதி பற்றாக்குறையால் தாமதம் அடைந்த வணிக வளாகம் கட்டும் பணி தற்போது நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் துவங்கியுள்ளது. 2026 பிப்.,ல் பயன்பாட்டிற்கு வரும் ,என்றார்.