உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு செய்து நடவடிக்கை!

பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு செய்து நடவடிக்கை!

மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதி மீறி அதிக ஆட்களை வைத்தும் மரத்தடியிலும் பட்டாசு தயாரிக்கப்படுகின்றது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றது. மேலும் அரசு அனுமதியின்றி ஒரு சில பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி பட்டாசுகள் பதுக்கியும் வைக்கப்படுகிறது. தவிர பட்டாசு ஆலைகளில் குத்தகைக்கு விட்டும் பட்டாசு தயாரிக்கப்படுகின்றது.அதே சமயத்தில் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளிலும், தகர செட்டிலும், பட்டாசு தயாரித்தும் பதுக்கியும் வைப்பவர்கள் மீது போலீசாரும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு விதி மீறி இயங்கும் செயல்பாடுகளால் அவ்வப்போது வெடி விபத்து ஏற்படுகின்றது.இதுபோன்று விதி மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்தால் அதிகமான உயிர் பலி ஏற்படுகின்றது. இதனால் மாவட்டத்தில் இதற்கென தனி குழு அமைத்து பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யப்படுகின்றது.இந்தக் குழு ஆய்வு செய்து விதி மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்கின்றது.அதன்படி 3 மாதத்தில் மட்டும் விதி மீறி இயங்கிய 94 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நடவடிக்கை தொடரும் பட்சத்தில் விபத்துகள் தவிர்க்க வாய்ப்புள்ளது. ஆய்வுகள் கண்துடைப்பாக நடைபெறாமல் இதுபோன்று சரியான முறையில் நடக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்ட தீப்பெட்டி தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி கூறுகையில், மாவட்டத்தில் ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதியை மீறி அதிக ஆட்களை வைத்து மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்படுகின்றது.சில ஆலைகளில் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றது. மேலும் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளிலும் மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தப் பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக விபத்து ஏற்படுவது தடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை