காரியாபட்டியில் முடங்கும் பி.எஸ்.என்.எல்., சேவை; அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்
காரியாபட்டி : காரியாபட்டியில் பி.எஸ்.என்.எல்., சேவை முடங்கி வருவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். சீராக சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியில் அரசு அலுவலகங்கள், அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் பலர் பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி சேவை தடைபட்டு, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. அலுவலகங்களில் சரிவர பணி செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். அலைபேசி பயன்படுத்தி வருபவர்கள் பெரிது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் இச்சேவையிலிருந்து விலகி வருகின்றனர். சீராக சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பாண்டியராஜன், வாடிக்கையாளர் : பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்தி வருகிறேன். வேகமான அலைவரிசை கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சில தினங்களாக மின்தடை ஏற்படும் போதெல்லாம் பி.எஸ்.என்.எல்., துண்டிக்கப்படுகிறது. தொடர்பு கொள்ள முடியாததால் பெரிதும் சிரமம் ஏற்படுவதுடன், மன உளைச்சல் ஏற்படுகிறது. சீராக சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் பேட்டரிகள் பழசாகி போனதால், சார்ஜ் நிற்கவில்லை. மின்சாரம் தடைபடும் போது, சேவை பாதிக்கப்படுகிறது. புது பேட்டரிகள் மாற்றியமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்தவுடன் காரியாபட்டியில் முதலில் மின் பேட்டரிகள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.