ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
சிவகாசி: சிவகாசி அருகே மம்சாபுரத்தில் எம்.துரைச்சாமிபுரம் செல்லும் ரோட்டில் ஊருணி உள்ளது. ஊருணியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஆங்காங்கே தடுப்புச் சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால் மெயின் ரோட்டில் திறந்த நிலையில் ஊருணி உள்ளது. இதனைக் கடந்து தான் அருகில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். தவிர எம். துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகனங்களும் இதே ரோட்டில் சென்று வருகின்றன. இந்நிலையில் ஊருணியில் தடுப்புச் சுவர் இல்லாததால் இந்த ரோட்டில் சென்று வருகின்ற பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கொஞ்சம் கவனம் சிதறினாலும் ஊருணியில் விழ வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாததால் விபத்து அபாயம் நேரிடுகிறது. எனவே ஊருணியில் உடனடியாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.