உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புறவழி சாலை பணிகளால் நீர்வரத்து ஓடைகள் சேதம்: விவசாயிகள் வேதனை

புறவழி சாலை பணிகளால் நீர்வரத்து ஓடைகள் சேதம்: விவசாயிகள் வேதனை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே நடந்து வரும் புறவழி சாலை பணிகளுக்காக மழைநீர் வரத்து ஓடைகள், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.அருப்புக்கோட்டை விருதுநகர் ரோட்டின் இருபுறமும் புதியதாக புறவழிச் சாலை ரூ.154 கோடியில் அமைக்கும் பணி ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. ரோட்டில் ஆங்காங்கு சிறு பாலங்கள் பெரிய பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த பாலங்கள் வழியாக ரோட்டின் இரு ஓரமும் உள்ள 6500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரும் நீர் வரத்து ஓடைகள் உள்ளன. இதேபோன்று ரோட்டிலிருந்து விவசாய பணிக்குச் செல்ல பாதைகளும் இருந்தது.ரோட்டை கடந்து செல்லும் ஓடைகள் இருக்கும் பகுதியில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோட்டின் இருபுறமும் மண்ணை போட்டு சமன்படுத்த ஓடைகளை சேதமாக்கி மண்ணை அள்ளி போட்டுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் சீராக வர முடியாமல் ஆங்காங்கு தேங்கி விடுகிறது. கன மழை பெய்தால் தண்ணீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள விவசாயநிலங்களில் தேங்கி கிடக்கிறது. விவசாய நிலங்களுக்கு செல்ல பாதைகள் அமைக்கப்பட்டு இருந்ததை ரோடு பணிக்காக சேதமாக்கி விட்டதால் நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். விவசாயிகள் கூறுகையில், புற வழிச்சாலை அமைப்பதற்காக எங்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தினர். அதற்கான தொகையும் வழங்கப்பட்டது. விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரோடு அமையும் என்று கூறினர். ஆனால் ரோடு அமைப்பதற்கு மழை நீர் வரத்து ஓடைகள், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளையும் சேதப்படுத்தி விட்டனர். மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. ஓடைகள், விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதைகளை முறையாக அமைத்து தர பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. இதனால் விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை