உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு, செயல்படாத சுகாதார வளாகம்

சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு, செயல்படாத சுகாதார வளாகம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தெருக்களில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடு பெயர்ந்தும், பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடு இன்றியும் மக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 36 வது வார்டு சேர்ந்தது ராமசாமிபுரம். இங்கு 10 க்கும் மேற்பட்ட தெருக்களும், காலனியில் 3 தெருக்களும் உள்ளன. பந்தல்குடி மெயின் ரோட்டிலிருந்து ராமசாமிபுரம் வழியாக கஞ்சநாயக்கன்பட்டி செல்ல ரோடு உள்ளது. இதன் வழியாக தினமும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும். ரோட்டின் நுழைவு பகுதியில் திறந்த வெளி கிணறு தடுப்பு சுவர் இன்றி உள்ளது.ஊரில் பல மாதங்களுக்கு முன்பு, லட்சக்கணக்கான ரூபாய் நிதியில் நகராட்சி நவீன சுகாதார வளாகம் கட்டியது. அமைச்சர் தலைமையில் திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மக்கள் ரோட்டை திறந்த வெளி கழிப்பறையாக மாற்றியுள்ளனர். ஊரில் 1 கி.மீ., துாரமுள்ள ரேஷன் கடை வடுகர்கோட்டைக்கு சென்று வாங்க வேண்டியுள்ளது. ராமசாமிபுரத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.காலனி பகுதியில் கழிப்பறை வசதி செய்யப்பட வேண்டும். தெருக்களில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பல பகுதிகளில் பெயர்ந்து நடக்க முடியாமலும் வாகனங்களில் செல்ல முடியாமல் உள்ளது. வாறுகால்களில் கழிவுநீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. தெருக்களின் கடைசி பகுதியில், பெரிய கண்மாயிலிருந்து சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம் கிராம கண்மாய்களுக்கு செல்லும் மழை நீர் ஓடை உள்ளது. இதை பராமரிப்பு செய்யாமல் விட்டதால் மழைக்காலங்களில் மழைநீர் ஓடையில் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கி விடுகிறது.ஓடையின் முட்புதர்களை அகற்றி தண்ணீர் வெளியேறும் வகையில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டும். தெருக்களில் நகராட்சி பொதுஅடி குழாய்கள் இல்லை. ஊரில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் உள்ளனர். புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் பந்தல்குடி மெயின் ரோட்டில் தான் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை