சேதமான கதிரடிக்கும் களம், ரோடு, துார்வாராத வாறுகால்
சிவகாசி: தெருக்களில் சேதமான ரோடு, கதிரடிக்கும் களங்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி , வாறுகால் துார்வார வில்லை, என சிவகாசி அருகே செங்கமலப்பட்டி ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். பராசக்தி காலனி முருகன் காலனி, அசேபா காலனி, ஜேஜே காலனி உள்ளடக்கிய செங்கமலபட்டி ஊராட்சியில் ரோடு சேதம் ,வாறுகால் துார்வாராதது முக்கிய பிரச்னையாக உள்ளது. பராசக்தி காலனியில் மேட்டுப்பகுதியில் குடிநீர் வராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். விநாயகர் கோயில் அருகிலும், முருகன் காலனியிலும் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. ஊராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களங்கள் சேதம் அடைந்துள்ளது. துார்வார வேண்டும் கோபால்சாமி: அசேபா காலனி, பராசக்தி காலனி ஜே ஜே காலனியில் தெருக்களில் ரோடு சேதமடைந்துள்ளது. அனைத்து தெருக்களிலுமே வாறுகால் துார்வார வில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறி தெருவில் தேங்குகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே தினமும் வாறுகாலை துார்வார வேண்டும். வாகனங்கள் செல்ல முடியவில்லை சுப்புராம்: செங்கமலப்பட்டியில் நாரணாபுரம் செல்லும் ரோடு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இப்பகுதியில் பட்டாசு ஆலைகள் உள்ள நிலையில் எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. எனவே சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும். சேதமான சுகாதாரவளாகம் மாரிமுத்து: இங்குள்ள பஸ் ஸ்டாப் சேதமடைந்து பயனற்றதாக உள்ளது. ஊராட்சி அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் சேதம் அடைந்து விட்டது. இதில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம், தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தாழ்வாக செல்லும் ஒயர்கள் சக்கனன்: மெயின் ரோட்டில் உயர் அழுத்த மின் ஒயர்கள் தாழ்வாகச் செல்கின்றது. ஒரு சில மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.