அனுமதியின்றி பிளக்ஸ் பேனர், ஸ்பீக்கர்கள் வைப்பதால் ஆபத்து; கொலை வரை செல்லும் சிறு மோதலால் பாதிப்பு
மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள், வீடுகளில் நடக்கும் வைபவங்களிலும், கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளிலும் போலீஸ் அனுமதி இன்றி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரோடு வளைவு பகுதியில் வாகன ஓட்டிகளின் பார்வையை மறைக்கும் வகையில் வைக்கப்படுகிறது. இதை அவ்வழியாக செல்லும் போலீசாரும் பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்கின்றனர்.இத்தகைய நிகழ்ச்சிகளின் போது போடப்படும் அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளால் அவ்வழியாக செல்லும் மக்கள் விபத்திற்கு ஆளாகின்றனர். குழாய் ஒலி பெருக்கிகள், ஸ்பீக்கர்களை பொருத்தி அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்புவதும் மக்களை அச்சுறுத்துகிறது. இதில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்கும் போதும், தங்களுக்கு பிடித்தமான பாடல்களை ஒலிபரப்பு செய்வதிலும் ஏற்படும் சிறு மோதல்கள், வாக்குவாதங்கள் கோஷ்டி மோதலாகி கொலை வரை சென்று சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.2024ல் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட சிறு தகராறு கொலை வரை சென்று ஒரு பெண் இன்ஸ்பெக்டர் கைதாகும் நிலை ஏற்பட்டது. இதேபோல் தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் அச்சம் தவிர்த்தான் கிராமத்தில் பட்டாசு வெடித்தல் ஏற்பட்ட பிரச்னை கோஷ்டி மோதலாக உருவெடுத்து ஒரு எஸ்.ஐ. காயமடையும் நிலை ஏற்பட்டது.இவற்றிற்கு அடிப்படை காரணம் அனுமதியின்றி பேனர்கள் வைப்பது, பட்டாசுகள் வெடிப்பது, அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிபரப்புவது போன்றவை தான். எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் இது போன்று அனுமதியின்றி செய்யும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.