பயன்பாட்டிற்கு வராத செக் போஸ்ட்--: விவசாயிகள் வேதனை
சேத்துார் : ராஜபாளையம் அருகே விவசாயிகளின் சொந்த செலவில் அமைக்கப்பட்ட போலீஸ் செக் போஸ்ட் செயல்பாட்டிற்கு கொண்டு வராததால் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியின் பிரிவுகளான ஆதிபுத்திரன் கொண்ட அய்யனார் கோயில், வாழவந்தான், பிராக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் 2500 ஏக்கருக்கும் மேல் தென்னை, மா, பலா, எலுமிச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.மலையில் இருந்து உருவாகும் ஆறுகள் ஓடைகளில் தொடர்ச்சியாக சேரும் மணல் இப்பகுதியினரின் மணல் திருட்டுக்கு சுலபமாகி வருகிறது. இது தவிர விவசாய விளைநிலங்களில் விளைப் பொருட்களை திருடி செல்வதும் வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்துவதும், வன விலங்குகளான மான், முயல், காட்டுப்பன்றி போன்றவைகளை வேட்டையாடுவதும் நடந்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த ஆறு ஆண்டுகளுக்கு முன் 2018ல் கலெக்டர் அனுமதியுடன் பிராக்குடி கண்மாய் அருகே கழிப்பறை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதியுடன் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் இருந்து விளை பொருட்கள் திருட்டு, சட்டவிரோத செயல்கள் தடுக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சோதனை சாவடியில் போலீசார் இல்லாமல் விளைப் பொருட்கள் மணல் திருட்டு அதிகம் நடந்து வருகிறது. சட்டவிரோத செயல்களை சரி செய்யவும், செக் போஸ்ட் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை முழுமை படுத்தவும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.