ஜி.எஸ்.டி.,யில் காகிதம், உற்பத்தி பொருட்களை 5 சதவீத வரி பிரிவில் சேர்க்க கோரிக்கை
சிவகாசி:காகிதம், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் ஜி.எஸ்.டி., விதிப்பில் 5 சதவீத பிரிவில் சேர்க்க ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த கோரி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அச்சக உரிமையாளர்கள், காலண்டர் உற்பத்தியாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணைச் செயலாளர் ஜெய்சங்கர், சிவகாசி அர்ச்சக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஹரி, நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஜி.எஸ்.டி.,விதிப்பில் காகிதம் 12 சதவீத வரி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் காகிதம் மூலம் உற்பத்தி செய்யப்படும் காலண்டர், நோட்புக், டைரி, புத்தகங்கள் ஆகியவை 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் என பல்வேறு வரி அடுக்குகளில் இடம்பெற்றுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைவதுடன் வணிகமும் பாதிக்கப்படுகிறது. மேலும் உள்ளீட்டு வரி சில இடங்களில் மிகுதியாகவும், சில இடங்களில் பற்றாக்குறையாகவும் உள்ளதால் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்யும்போது சவாலான சூழல் நிலவுகிறது. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமான அச்சுத் தொழிலை காப்பாற்றும் வகையில் காகிதம் மற்றும் காகித உற்பத்தி பொருட்கள் அனைத்தையும் 5 சதவீத வரி அடுக்கில் கொண்டு வர 56 வது ஜி.எஸ்.டி., கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.