திருவண்ணாமலை ரோட்டில் செல்ல நுழைவு கட்டணம் ஊராட்சிக்கு பக்தர்கள் எதிர்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பிலும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் கார், வேன் போன்ற வாகனங்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஊராட்சி சார்பிலும், வாகனங்கள் நிறுத்தும் இடத்தைச் சார்ந்தவர்களும் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் ஒரே இடத்திற்கு இரண்டு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்படுகிறது. தமிழகத்தில் எந்த ஊராட்சியிலும் இதுபோல் ரோட்டில் செல்வதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க படாத நிலையில் திருவண்ணாமலையில் மட்டும் ஊராட்சி நிர்வாகம் கட்டணம் வசூல் செய்வது பக்தர்களிடம் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.