மேலும் செய்திகள்
வர்ணம் பூசாத வேகத்தடை
16-Oct-2024
மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலை, கிராமப்புறச் ரோடுகளில் வளைவுகள், ஊருக்குள் நுழையும் இடங்கள் என அதிக அளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. வாகனங்களை சீராக இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் எரிச்சல் அடைவதுடன், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதிக பாரங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் வேகத்தடையை கடப்பதற்குள் படாத பாடு படுகின்றன. சிறிய ரக கார்கள் வேகத்தடையில் உரசி ஏறி இறங்குவதற்குள் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், பழுதாகி நின்று விடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.இதையடுத்து வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து பெரும்பாலான ரோடுகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. அங்கு எச்சரிக்கைக்காக போடப்பட்டிருந்த வெள்ளை, மஞ்சள் நிற கோடுகள் அழிக்கப்படவில்லை. வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடத்தில் சீராக இல்லாமல் மேடு, பள்ளமாக உள்ளது. இதனை வாகனங்கள் கடக்கும் போது குலுங்குவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.கோடுகள் அழிக்கப்படாததால் வேகத்தடை இருக்கிறதோ என்கிற உணர்வில் வாகனங்களை மெதுவாக ஓட்டுகின்றனர். அருகில் செல்லும் போது தான் வேகத்தடை இல்லாதது கண்டு குழப்பம் அடைகின்றனர். பொதுவாக ரோடுகளை அமைக்கும் போது பாதுகாப்பாகவும் வளைவான இடங்களில் எச்சரிக்கை பலகை, மஞ்சள் அல்லது வெள்ளை நிற கோடுகள் போட வேண்டுமே தவிர வேகத்தடைகள் அமைக்க கூடாது. பெரும்பாலான இடங்களில் அப்பகுதியில் உள்ளவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே வேறு வழியின்றி வேகத்தடைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.வேகத்தடைகள் இல்லாமல் இருப்பது தான் அனைத்து வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடங்களில் உள்ள பள்ளங்களை சீரமைக்கவும், எச்சரிக்கைக்காக போடப்பட்ட கோடுகளை அழிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
16-Oct-2024