வெப் சைட் செயல் இழந்ததால் அபராதம் செலுத்துவதில் சிக்கல்
அருப்புக்கோட்டை : போலீஸ் வெப்சைட் செயல் இழந்ததால், போலீசார் வாகனங்களுக்கு விதிக்கும் அபராத தொகையை செலுத்த முடியாததால் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு செல்லும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிற பணிகளை செய்ய முடியாமல் தேக்க நிலை அடைந்துள்ளது.போக்குவரத்து போலீசார் வாகனங்களில் அதிவேகமாக செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, வாகன இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் இருப்பது, லைசென்ஸ் இல்லாமல் செல்வது, குடி போதையில் வாகனங்களை ஓட்டுவது உட்பட குற்றங்களுக்கு போக்குவரத்து போலீசார் ஆன்லைன் மூலம் செலுத்தும் வகையில், 2009ல், இருந்து கையடக்க கருவியின் வழியாக அபராதம் விதிக்கின்றனர். விதிக்கப்படும் அபராதங்கள் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் அலைபேசிக்கு எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வந்துவிடும்.அபராத தொகையை செலுத்துவதற்கு டிஎன் போலீஸ் வெப்சைட்டில் இ செல்லான் மூலம் செலுத்த வேண்டும். இந்த வெப்சைட் கடந்த இருவாரமாக செயல் இழந்துவிட்டது. அபராதம் விதித்த வாகனங்களுக்கு இ செல்லான் மூலம் பணத்தை செலுத்திய ரசீதை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காண்பித்தால் தான் வாகனங்களுக்கான எப்.சி., எடுப்பது, பெயர் மாற்றம், பிட்னெஸ் சான்றிதழ் உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும்.போலீஸ் வைப்சைட் செயல் இழந்துவிட்டதால் இப்பணிகளை செய்ய முடியாமல் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.