உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தடுப்புகள் இல்லாமல் கலெக்டர் அலுவலக மேம்பாலப்பணிகளுக்கு பள்ளம் தோண்டல் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்து

தடுப்புகள் இல்லாமல் கலெக்டர் அலுவலக மேம்பாலப்பணிகளுக்கு பள்ளம் தோண்டல் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்து

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு நடக்கும் நான்கு வழிச்சாலை மேம்பாலப்பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளங்களுக்கு தடுப்புகள் அமைக்கப் படாததால் இரவில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இப்பணிகளுக்காக பணிகள் துவங்கப்பட்ட போது சர்வீஸ் ரோட்டை மாற்றுப்பாதையாக மாற்றி ரோட்டில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி, கோவில்பட்டி, திருநெல்வேலியில் இருந்து மதுரை, பிற மாவட்டங்களுக்கும் செல்லும் டூவீலர்கள், அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், வேன்கள் உள்பட தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் விருதுநகரை கடந்து செல்லும் போது சிறிது துாரம் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்த சர்வீஸ் ரோட்டில் விதிகளை மீறி எதிர்திசையில் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் விபத்து அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது மேம்பாலத்தை சிறிது துாரம் நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நான்கு வழிச்சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது. இப்படி தோண்டப்பட்ட பள்ளங்களுக்கு அருகே செல்லும் சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் அமைக்கப்படாமல் சென்டர் மீடியன் அமைக்கப்பயன்படும் கான்கீரிட் தடுப்புகளை இடைவெளி விட்டு அமைத்துள்ளனர். இதனால் இரவில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி தடுப்புகள் இல்லாத பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்தால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கலெக்டர் அலுவலக மேம்பாலப்பணிகள் முடியும் வரை பள்ளம் தோண்டுவதற்கு முன்பு சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து பணிகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ