பரிதவிப்பு: உற்பத்தியாகும் கரும்பின் விற்பனைக்கு உத்தரவாதம் இல்லை
ராஜபாளையம்: மாவட்டத்தில் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு விற்பனைக்கான உத்தரவாதம் இல்லாத சூழலில் பாரம்பரியமாக ஈடுபடும் விவசாயிகள் முறையான மாற்று சாகுபடிக்கு வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், தேவதானம் பகுதிகளில் நீர் வரத்து காரணமாக நெல் விவசாயத்தை அடுத்து தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் கரும்பு சாகுபடி நடந்து வருகிறது.இப் பகுதிகளில் பாரம்பரியமாக கரும்பு சாகுபடி செய்து சாற்றை காய்ச்சி வெல்லமாக மாற்றி கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் வியாபாரம் நடந்து வந்தது. விருதுநகர் ,தென்காசி மாவட்டத்தை ஒட்டி தனியார் சர்க்கரை ஆலை தொடங்கியதால் கரும்பு நடவு பகுதி ஊக்குவிக்கப்பட்டு ஆலை நிர்வாகத்திற்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டு வங்கிகள் மூலம் கடன் பெற்று விவசாயம் அதிக அளவில் நடந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு பிரச்சனைகளால் ஆலை நிர்வாகம் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதனிடையே 2018--19 ல் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரண்டு மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை தற்போது வரை ரூ.13 கோடிக்கும் அதிகமாக வட்டியுடன் பட்டுவாடா நிலுவையில் வைத்துள்ளது. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதுடன் நிலுவைத் தொகையை வழங்கி விட்டு உற்பத்தியை தொடங்க கோரிக்கை வைத்துள்ளனர்.ஏற்கனவே நீர் பிடிப்பு அதிகம் உள்ள தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கரும்பு விவசாயத்தை தவிர மாற்று விவசாயம் செய்ய வழியின்றி பாரம்பரிய விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இருப்பினும் வேறு வழியின்றி மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி அருகிலுள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும், தேனி மாவட்டத்தில் செயல்படும் சர்க்கரை ஆலைகளுக்கு பல்வேறு சிக்கல்களுக்கு இடையே கரும்பினை அனுப்பி வருகின்றனர்.வெட்டுக் கூலியாட்கள் பற்றாக்குறை, கூலி அதிகம், எடை குறைந்தால் ஆலை நிர்வாகம் தரப்பில் அலவன்ஸ் பிடித்தம் போன்ற கெடுபிடிகள் உள்ளன.நீர் அதிகம் உள்ள பகுதிகளில் கரும்பை மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்ற சூழலில் மாற்று விவசாயம் குறித்து முறையான விழிப்புணர்வு இன்றி 60 சதவீத சாகுபடி பரப்பளவு குறைந்து சிலர் தரிசாகவும் விட்டுள்ளனர்.பாரம்பரிய கரும்பு விவசாயிகள் வேறு வழி இன்றி பிரச்சனைகளுக்கு இடையே அண்டை மாவட்டங்களுக்கு கரும்புகளை அனுப்பியும் வருகின்றனர்.தாமதிக்காமல் நிலுவைத் தொகையை வழங்குவதுடன் மாற்று விவசாயம் குறித்து முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.