தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு வஞ்சிக்கும் தி.மு.க., அரசு ஆசிரியர் சங்கம் கண்டனம்
அருப்புக்கோட்டை:''தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு ஆசிரியர்களை வஞ்சிக்கிறது தி.மு.க., அரசு,'' என, தேசிய ஆசிரியர் சங்க தமிழ்நாடு கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.அருப்புக்கோட்டையில் சங்க மாநில தலைவர் திரிலோக சந்திரன், பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது, ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து காசாக்குவது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது, அகவிலைப்படி நிலுவை தொகையை அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதிகளாக தி.மு.க., அளித்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் பதவி ஏற்றது முதல் இக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தாமதம் செய்து கொண்டே வஞ்சித்து வருகிறது.டாக்டர்கள் மீதான தாக்குதலை தேசிய ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான சமூக விரோதிகளின் தாக்குதல்களை தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வஞ்சகமாய் பிரித்தாளுவது, திசை திருப்புவது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். எதிர்காலம் குறித்து அச்சத்தில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை முழுமையாக பேரிருளில் தள்ள வேண்டாம். 2026 தேர்தலை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும் என்றனர்.