சாத்துார் ரோட்டில் மின்கம்பங்கள் போக்குவரத்து நெருக்கடியால் அவதி
சாத்துார் : சாத்துாரில் மின்துறையினரால் அகற்றப்பட்ட மின்கம்பங்களை ரோட்டில் போட்டு சென்றதால் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சாத்துாரில் 20 நாட்களுக்கு முன்பு மெயின்ரோடு, வெம்பக்கோட்டை ரோட்டில் உயரம் குறைவாக இருந்த மின்கம்பங்களை அகற்றி உயரமான மின் கம்பங்களை வாரியத்தினர் நட்டனர். மின்கம்பங்கள் உடனடியாக ரோட்டில் இருந்து அகற்றப்படாமல் ஆங்காங்கே போட்டு சென்றனர். சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப் அருகில் ரோட்டின் ஓரத்திலேயே அகற்றப்பட்ட மின்கம்பம் போடப்பட்டுள்ளது. மேலும் கிழக்குப் பக்க ரோட்டில் மினி லோடு வேன் நிறுத்தப்படும் இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் போட்டு சென்றனர்.இதனால் இங்கு நிறுத்தப்பட்ட மினி லோடு வேன்கள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி இன்றி ரோட்டில் நிறுத்தும் நிலை உள்ளது.இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே மின்சார வாரியத் துறையினர் மின்கம்பங்களை ரோட்டில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.