ஸ்ரீவி., செண்பக தோப்பில் குடிநீர் குழாய்களை உடைத்த யானைகள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் நகராட்சி குடிநீர் குழாய்களை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளில் உள்ள 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உள்ளூர் செண்பகத் தோப்பு நீர் ஆதாரம் மூலமும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில மாதங்களாக தாமிரபரணி குடிநீர் வருவதில் தாமதம் ஏற்பட்டு நகரில் 10 நாட்களைக் கடந்து தான் குடிநீர் சப்ளை நடக்கிறது. இந்நிலையில் செண்பகத் தோப்பு நகராட்சி குடிநீர் ஆதாரப்பகுதிகளில் யானைகள் புகுந்து குழாய்களை கடந்த இரு நாட்களுக்கு முன்பு சேதப்படுத்தி உள்ளது. இதனால் செண்பகத் தோப்பில் இருந்தும் குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் கூறுகையில், செண்பகதோப்பு குடிநீர் குழாய்களை யானைகள் சேதப்படுத்தியதால் அங்கிருந்து குடிநீர் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குழாய்களை நகராட்சி ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர். இன்றைக்குள் குழாய்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் குடிநீர் சப்ளை துவங்கும் என்றார்.