மலையடிவார தோப்புகளில் யானைகள் நடமாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மம்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார தோப்புகளில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க கோரி புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இதில் தென்னை விவசாய சங்க மாவட்ட தலைவர் முத்தையா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜய முருகன், தென்னை விவசாயிகள் சங்க தலைவர அப்பாஸ் மற்றும் மம்சாபுரம் பகுதி விவசாயிகள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை டி.எஸ்.பி.ராஜா மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகள் துணை இயக்குனர் தேவராஜிடம் தங்கள் தரப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது நடமாட்டம் உள்ள தோப்புகளில் வனத்துறை நிலத்தை ஒட்டி அகழி அமைத்தல், மினவேலி அமைத்தல் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றி தருவதாக துணை இயக்குனர் தேவராஜ் கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.