வனத்துறையினருக்கு கண்ணாமூச்சி காட்டும் யானைகள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மலையடிவார தோப்புகளுக்கு வரும் யானைகளை வனத்துறையினர் விரட்ட, விரட்ட மீண்டும் வந்து மரங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நான்கு மாதமாக நடக்கும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படாமல் கவலை அடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான ராக்காச்சி அம்மன் கோயில், அத்தி துண்டு, செண்பகத்தோப்பு, பந்த பாறை, ரெங்கர் கோயில், ரெங்கர் தீர்த்தம் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக யானைகள் புகுந்து மா, தென்னை, வாழைகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் மிகுந்த பொருளாதார இழப்பு ஆளாகி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்வமணி தலைமையிலான வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தோப்புகளை யானைகள் சேதப்படுத்தி வருவது நின்றபாடில்லை.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வனச்சரக மலை அடிவாரத்தில் அகழிகள் வெட்டும் பணி துவங்கியுள்ளது. ஆனாலும், கடந்த இரு நாட்களுக்கு முன்பு செண்பகத் தோப்பு மலையடிவார தோப்பில் யானை புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. தகவலறிந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டினர்.வனச்சரகர் செல்வமணி கூறுகையில்,மலையடிவார தோப்புகளில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க தற்போது அகழிகள் வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது ரெங்கர் கோவிலில் இருந்து ரெங்கர்தீர்த்தம் வரை அகழி வெட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இல்லை. செண்பகத்தோப்பு விரியன் கோவில் பீட் பகுதிகளில் அகழிகள் அமைக்கும் பட்சத்தில் யானைகள் தோப்புகளுக்கு வர முடியாத நிலை ஏற்படும். தொடர்ந்து வனத்துறையினர் ரோந்து சென்று யானைகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்து வருகின்றனர் என்றார்.