அவசரகதியில் நடந்த பாலம் பணிகள் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் சீரமைக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டி: காரியாபட்டி மந்திரிஓடை அருகே அருப்புக்கோட்டை - - -மதுரை ரோட்டில் கட்டப்பட்ட அவசரகதியில் நடந்த பாலம் பணிகள் முழுமையாக இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி மந்திரிஓடை பகுதியில் பெய்யும் மழை நீர் செல்ல வழி இன்றி இருந்தது. ஊருக்குள் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து மதுரை -அருப்புக்கோட்டை ரோட்டின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மழை நீர் தெற்காற்றில் செல்ல வழி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன் பாலம் பணிகள் துவங்கின. பஸ்கள் எஸ்.கல்லுப்பட்டி ரோட்டில் திருப்பி விடப்பட்டு, மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் சென்றன.அங்கு அதிவேகமாக வந்த வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. அவசரக் கதியில் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டன. முழுமையாக பணிகள் முடிவடையாததால் ஜல்லிக் கற்களாக உள்ளன. நான்கு வழிச் சாலையை ஒட்டி தற்போது கட்டப்பட்ட பாலம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனித்து கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.டூவீலரில் செல்பவர்கள் இடறி, நிலை தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க உடனடியாக சீரமைக்க வேண்டும்.