சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மடை சேதம் தரிசான ஈஞ்சார் கண்மாய் பாசன விவசாய நிலங்கள்
சிவகாசி: கண்மாய் கரை முழுவதும் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள், மடை, சிமெண்ட் வாய்க்கால் சேதம் என ஈஞ்சார் கண்மாய் பரிதாபத்தில் உள்ளது. மேலும் 130 ஏக்கர் பாசன வசதியில் 100 ஏக்கர் தரிசான அவலம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே ஈஞ்சார் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவு 130 ஏக்கர் பாசன வசதி உடையது. இந்தக் கண்மாயை நம்பி இப்பகுதியில் நெல், மக்காச்சோளம், வாழை பயிரிடுகின்றனர். கண்மாயின் பெரும்பான்மையான பகுதியில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. மேலும் கரையிலும் முட்புதர்கள், சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. தவிர கரை பலவீனம் அடைந்த நிலையில் உள்ளது. கண்மாயில் உள்ள ஒரு மடையும் சேதம் அடைந்துள்ளது. மடை வழியாக தண்ணீர் வெளியேற 300 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாய்க்கால் முற்றிலும் சேதம் அடைந்து இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். துார்வார வேண்டும் மலையப்பன், விவசாயி: கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றுவதற்கு ஏலம் விடப்பட்ட நிலையில் பெரிய மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டது. ஆனாலும் கண்மாயில் ஆங்காங்கே சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. இதனால் மழை பெய்து தண்ணீர் வந்தாலும் விரைவில் உறிஞ்சப்படுகிறது. எனவே கண்மாயை முழுமையாக துார்வார வேண்டும். தரிசாக மாறிய அவலம் செந்துார் பாண்டியன், விவசாயி: கடந்த காலங்களில் இந்த கண்மாயை நம்பி 130 ஏக்கரில் நெல், வாழை மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. மடையில் இருந்து தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களுக்கு பாய்ச்சுவதற்காக சிமெண்ட் வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாய்க்கால் தற்போது முற்றிலும் சேதம் அடைந்து இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது. விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. 100 ஏக்கர் தரிசாக மாறிவிட்டது. வீணாக செல்லும் தண்ணீர் மருதுபாண்டி, விவசாயி: கண்மாயில் மடை சேதம் அடைந்து விட்டது. தண்ணீர் தேக்க வழி இல்லாமல் வெளியேறி விடுகின்றது. சமீபத்தில் மழை பெய்து ஓரளவிற்கு தண்ணீர் வந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்கால் சேதத்தால் தண்ணீர் வீணாக ஓடைக்கு சென்று விடுகிறது. சீரமைக்கப்படும் கண்ணன், உதவி பொறியாளர், பொதுப்பணித்துறை: கண்மாயில் சிறிதளவு தண்ணீர் உள்ளது. தண்ணீர் வற்றிய பின்னர் சேதம் அடைந்த மடை, வாய்க்கால் சீரமைக்கப்படும்.