கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அலட்சியமாக வருவாய்த்துறை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார் கொடுத்து இரு ஆண்டாகியும் வருவாய்த்துறையினர் அலட்சியமாக இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் மூலம் கோயிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு சொந்தமான கடைகளும் கோயிலை சுற்றியும் பஜார் பகுதிகளிலும் உள்ளது. அருப்புக்கோட்டை செம்பட்டி அருகே பாப்பான்குளம் கண்மாய் அருகில் கோயில் பூஜை நிவேதனத்திற்கு சமஸ்தானம் 25 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. கோயில் நிர்வாகம் இதை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டது. கோயில் பராமரிப்பரில் உள்ள நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வதும் இல்லை. தற்போது 25 ஏக்கரில், 8 ஏக்கர் மட்டும் தான் கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பல பேர் கோயில் நிலத்தில் பட்டா வாங்கியுள்ளனர்.வருவாய் துறையினரும் கோயில் நிலம் தெரிந்தும் முழுமையாக ஆய்வு செய்யாமல் பட்டா போட்டு கொடுத்துள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை மீட்க கோவில் நிர்வாகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை.இதுகுறித்து, தேவி, செயல் அலுவலர், மீனாட்சி சொக்கநாதர் கோயில் : பாப்பாங்குளம் கண்மாய் அருகில் கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டது. கோயில் இடத்தில் பலர் பட்டா போட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.