செகந்திராபாத் --கொல்லம் ரயிலை தொடர்ந்து இயக்க எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்:சபரிமலை சீசனை முன்னிட்டு செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.டிசம்பர் முதல் வியாழன் தோறும் இரவு 8:00 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக கொல்லம் சென்றடைந்து, மறு மார்க்கத்தில் சனிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1:30 மணிக்கு செகந்தராபாத் சென்றடைந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியே பயணித்ததால் மக்கள் அதிகளவில் பயணித்தனர்.நல்ல வரவேற்பு இருந்ததால் ஜனவரியிலும் தொடர்ந்து இயக்கப்பட்டது. நாளை (ஜன.18) கொல்லத்தில் இருந்து புறப்படுவதுடன் இதன் பயணம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலால் சபரிமலை பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட பயணிகள், கேரளா, ஆந்திரா, தமிழகம் என மூன்று மாநில மக்கள் பயனடைந்தனர். எனவே இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.