உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊராட்சி தோறும் வேளாண்மை துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த எதிர்பார்ப்பு:

ஊராட்சி தோறும் வேளாண்மை துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த எதிர்பார்ப்பு:

நாட்டின் உயிர்நாடியாகவும், மனித சமுதாயத்திற்கு தேவையான உணவு பொருட்கள் போதுமான அளவிற்கு கிடைத்தடவும் வேளாண்மை தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக வளர்ச்சி திட்டங்கள், நிதிகள், மானியங்கள், தொழில்நுட்பங்கள் குறித்தும், நோய் பாதிப்பில் இருந்து விளை பயிர்களை காப்பது சம்பந்தமாகவும் இத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் கூட்டங்கள் பெரும்பாலும் துறை சார்ந்த அலுவலகத்தில் நடக்கிறது. இதில் குறைந்த அளவு விவசாயிகளும், வழக்கமான விவசாய சங்க நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். இதனால் கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு எவ்வித விபரமும் தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் விவசாயிகள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து, விழிப்புணர்வு கூட்டங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.இதனால் தங்கள் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து களத்தில் பணியாற்றும் விவசாயிகளுக்கு தெரிவதில்லை. அதிகாரிகள் அழைத்தாலும் நேரம் வீணாகும் என்பதால் அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு செல்ல மறுக்கின்றனர்.இதனால் அரசின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள், கருத்தரங்குகளின் நோக்கமே நிறைவேறாமல் போய் விடுகிறது. அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறமுடியாமல் பயிர்களை காப்பாற்ற முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கு விவசாயிகள் ஆளாகி வருகின்றனர்.எனவே, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி தோறும் வேளாண்மை துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தினால் மட்டுமே விவசாயிகள் பயனடைவார்கள். அரசின் நோக்கம் நிறைவேறும். இல்லையெனில் அது பயனில்லாத கூட்டமாகி விடும்.எனவே, துறை அதிகாரிகளின் சரியான திட்டமிடுதலுடன், சம்பந்தப்பட்ட கிராமங்களில் முன்னறிவிப்பு செய்து, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை