மகளிர் போலீஸ் ஸ்டேஷன் காரியாபட்டியில் துவக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டி: காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்புடன் உள்ளனர். காரியாபட்டியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் ஏற்படும் பொதுவான பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணர் ஊர்களில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. தகராறு , சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து தீர்வு எட்டப்படுகிறது. பெண்கள், குடும்ப பிரச்னை, பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவு, குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, அருப்புக்கோட்டை மகளிர் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும். நீண்ட தூரம் சென்று வருவதுடன் கூடுதல் செலவு ஏற்படுகிறது. பொதுவாக போலீஸ் ஸ்டேஷன் சென்றுவர பெண்களுக்கு தயக்கம் இருக்கும். வேறு வழியின்றி போக வேண்டிய கட்டாயத்தின் காரணமாக சிலர் போலீஸ் ஸ்டேஷனை நாடுகின்றனர். அதுபோன்ற சூழ்நிலைகளில் அருப்புக்கோட்டையில் உள்ள மகளிர் ஸ்டேஷனில் சென்று புகார் அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பல பஸ்கள் மாறி அலைய முடியாமல் சிலர் புகார் தர தயங்குகின்றனர். இது போன்று சூழ்நிலையை தவிர்க்க, காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. காரியாபட்டியில் கோர்ட் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் பெண்கள் அருகிலேயே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதால் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.