சாத்துார் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு கட்டடத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு
சாத்துார் : சாத்துார் மெயின்ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை பிரசவ வார்டு கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாத்துார் மெயின்ரோட்டில் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் தற்போது கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை பரிசோதனை, ரத்த சேமிப்பு வங்கி பிரசவ வார்டு, பிரசவத்திற்கு பின் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவும் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கட்டடத்தின் பக்கவாட்டு சுவர்கள், ஜன்னல் சன்சைடு ஸ்லாப்புகள் சிதலமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து போன நிலையில் உள்ளது. சித்த மருத்துவ பிரிவும் சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து சித்த மருத்துவ சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிலையில் இந்த கட்டடத்தின் பல பகுதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் இங்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் விளக்குகள் பல எரியாமல் உள்ளதால் இங்கு தங்கி சிகிச்சை பெறும் மக்கள் , செவிலியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அரசு தேவையான நிதி ஒதுக்கி மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.