காரியாபட்டி வடகரையில் சேதமான ஊருணி தடுப்புச் சுவரை சீரமைக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டி:காரியாபட்டி வடகரை ஊருணியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் சேதமடைந்து, மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.காரியாபட்டி வடகரையில் மக்கள் பயன்பாட்டிற்காக ஊரை ஒட்டி ஊருணி வெட்டப்பட்டது. காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் ஊருணியில் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், விவசாயமும் செய்தனர். சுற்றி உள்ள காடுகள் தரிசு நிலங்களாக மாறி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. மழை நேரங்களில் பெய்யும் மழை நீர் ஊருணிக்கு வராமல் போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊருணியை ஒட்டி காரியாபட்டி பிசிண்டி வழியாக விருதுநகருக்கு செல்ல ரோடு உள்ளது. ரோட்டை ஒட்டி உள்ள கரை மழைக்கு அரிப்பு ஏற்பட்டு மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 15 ஆண்டுகளுக்கு முன் ரோட்டை ஒட்டி தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, வாகனங்கள் சிரமமின்றி சென்றன. நாளடைவில் தடுப்புச் சுவர் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து ஊருணியில் விழுந்தன. மழைக்கு மண் சரிவு ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, சேதம் அடைந்துள்ள தடுப்புச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.