குப்பை கிடங்காக மாறும் ஆயுதப்படை வளாக வெளிப்புறம்
விருதுநகர்: விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சியின் ஆயுதப்படை வெளிப்புறத்தில் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளதால் இப்பகுதி குப்பை கிடங்கு போல் மாறி வருகிறது.விருதுநகர் அருகே உள்ளது கூரைக்குண்டு ஊராட்சி. இங்கு ஆயுதப்படை வெளிப்புறத்தில் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது. இந்த ஊராட்சியில் முத்துராமலிங்கம் நகர் பகுதியில் வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே துப்புரவுத் தொழிலாளர்கள் வந்து கழிவு நீர் வாறுகாலை மட்டுமே சுத்தம் செய்கின்றனர். இதனால் பொது மக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை வீதிகளில் அல்லது வாறுகால்களில் கொட்டுகின்றனர்.மேலும் ஊராட்சி மக்கள் பலர் சிவகாசி சாலையில் உள்ள ஆத்துப்பாலத்தின் இருபகுதிகளிலும் கொட்டி விடுகின்றனர்.இதனை விருதுநகர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சூலக்கரை மேற்கு பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் குப்பையை அகற்றுவதில்லை எனவும் பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் உள்ள சர்வீஸ் ரோடு ஆயுதப்படை வெளிப்புறம் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், இப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.