உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டில் விழும் மரக்கிளைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

ரோட்டில் விழும் மரக்கிளைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

மாவட்டத்தில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சேத்துார், தேவதானம் வழியாக செங்கோட்டை வரை தேசிய நெடுஞ்சாலை எண் 744 செல்கிறது. இதேபோல் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மல்லி, சிவகாசி, திருத்தங்கல் ஆமத்தூர், விருதுநகர், பாலவனத்தம், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வழியாக மானாமதுரை வரையிலும், வத்திராயிருப்பிலிருந்து அழகாபுரி, எரிச்சநத்தம் வழியாக விருதுநகர் வரையிலும், ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை வழியாக சாத்தூர் வரையிலும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த ரோடுகளின் இருபுறமும் நூறாண்டு பழமை வாய்ந்த ஏராளமான மரங்கள் வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் விதமாக அமைந்துள்ளது. பல வழித்தடங்களில் மரங்களின் கிளைகள் குடை போல் விரிந்து காணப்படுகிறது. தற்போது இந்த வழித்தடங்களில் ஏராளமான உயரம் அதிகம் மிக்க கண்டெய்னர் லாரிகள் தினமும் பயணித்து வருகிறது. அவ்வாறு செல்லும்போது தாழ்வான நிலையில் உள்ள மரக்கிளைகளில் கண்டெய்னர்கள் உரசி கிளைகள் வலுவிழந்து வருகிறது. அடுத்தடுத்து கண்டெய்னர் லாரிகள் செல்லும்போது வலுவிழந்த கிளைகள் முறிந்து தொங்கும் நிலையில் உள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் காய்ந்து, பட்டுபோன நிலையில் நிற்கின்றன. இவற்றின் கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து ரோட்டில் விழும் அபாய நிலையில் பல இடங்களில் காணப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்திரா நகர், ராமகிருஷ்ணாபுரம், பெரிய மாரியம்மன் கோவில் பைபாஸ் ரோடுகளில் உள்ள மரங்களின் கிளைகளில் கண்டெய்னர்கள் உரசி விழும் நிலை காணப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நேற்று காலை 10:00 மணிக்கு கண்டெய்னர் லாரி மோதி ஒரு மரத்தின் கிளை முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கண்டெய்னரின் ஒரு பக்க தகரம் சேதமடைந்தது. இதேபோல் ராஜபாளையம் ரோட்டிலும், சிவகாசி ரோட்டிலும் பல இடங்களில் கிளைகள் சேதமடைந்து காணப்படுகிறது. பலத்த காற்று வீசினாலோ அல்லது அதிவேகத்தில் கனரக வாகனங்கள் வந்து உரசி சென்றாலோ மரக்கிளைகள் முறிந்து ரோட்டில் விழும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ரோட்டில் டூவீலர்கள் ஆட்டோக்கள் கார்களில் செல்லும் போது மரக்கிளைகள் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து அபாயம், உயிர் சேத பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதனை தவிர்க்க தேசிய, மாநில நெடுஞ்சாலை இருபுறமும் ரோட்டில் முறிந்து தொங்கும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி