ஓராண்டாகியும் வறட்சி நிவாரணம் வழங்காததால் விவசாயிகள் வேதனை
நரிக்குடி; நரிக்குடி பகுதியில் ஓராண்டாகியும் வறட்சி நிவாரணம் வழங்காததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். நரிக்குடி கட்டனூர், இருஞ்சிறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்ற ஆண்டு நெல் நடவு செய்தனர். இதற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். நன்கு முளைத்து வரும் சமயத்தில், போதிய மழை இல்லாததால் பயிர்கள் வாடின. அதற்குப் பின் மழை பெய்த போதும் பயனில்லாமல் போனது. இதனால் விவசாயிகள் கருகிய பயிரை உழவு செய்து, மாற்று பயிர் நடவு செய்தனர். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஓராண்டாகியும் இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கவில்லை. இதனால் கடனில் தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கனவே அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அது போதுமானதாக இல்லை என காப்பீட்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து கூடுதல் தகவலுடன் மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களில் அடிப்படையில் விரைவில் வறட்சி நிவாரணம் வழங்க காப்பீட்டு நிறுவனம் முன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.