உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அறிவியல் நிலைய பண்ணை நிலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா வேண்டாம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

அறிவியல் நிலைய பண்ணை நிலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா வேண்டாம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர்: அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய பண்ணை நிலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க வேண்டாம், என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரினர்.கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், விவசாய நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: சிறு, குறு விவசாயிகளுக்கு பாசன வசதி செய்வதற்காக டாப்செட்கோ மூலம் ரூ.1 லட்சம் மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசு மின்வாரியத்திற்கு பணம் செலுத்தாததால் மின் இணைப்புகொடுக்காமல் 272 பேர் விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுத வேண்டும். தென்னை பயிருக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.சுகபுத்ரா, கலெக்டர்: அரசுக்கு கடிதம் எழுதப்படும்.சந்திரசேகர், ராஜபாளையம்: சோலார் மின்வேலி திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். அதே போல் மம்சாபுரம் கண்மாயில் இருந்து செம்மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.ராமச்சந்திராஜா, ராஜபாளையம்: கொண்டனேரி கண்மாய் கடம்பக்குளத்தில் உலர்களம் வேண்டும். புறம்போக்கு நிலம் உள்ளது. பேரூராட்சி பகுதியில் இருப்பதால் தர மறுக்கின்றனர். தரணி சர்க்கரை ஆலை நிலுவை தொகை குறித்து முத்தரப்புக் கூட்டத்தில் விவாதித்ததை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் பருத்தி அதிகம் விளைவதால் 'காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம்' மூலம் கொள்முதல் செய்து பருத்தி விவசாயிகளை காக்க வேண்டும். தற்போது உற்பத்தி விலையை காட்டிலும் கொள்முதல் விலை மிக குறைவாக உள்ளது.சுகபுத்ரா, கலெக்டர்: தரணி சர்க்கரை ஆலை நிர்வாக மேலாளரிடம் இருந்து கடிதம் கேட்டுள்ளோம். விரைவில் நிலுவை தொகை பெற்றுத்தரப்படும்.அர்ஜூனன், காவிரி, வைகை, குண்டாறு அமைப்பு: திருச்சுழி குல்லம்பட்டியில் காட்டுப்பன்றியால் ஏற்பட்ட பயிர் சேதம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயி காளிமுத்து குடும்பத்திற்கு அரசு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.தேவராஜ், புலிகள் காப்பக துணை இயக்குனர்: பயிர் சேத இழப்பீடு வழங்கப்படும். காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த ஊரக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இக்குழுக்களிடம் விவசாயிகள் பன்றி பாதிப்பு குறித்து எழுத்துப்பூர்வ புகார் அளிக்க வேண்டும். அதன்படியே அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ராம்பாண்டியன், அருப்புக்கோட்டை: கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தின் 128.5 ஏக்கர் பண்ணை நிலத்தில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அருப்புக்கோட்டை தாசில்தார், அறிவியல் நிலைய அதிகாரிகளிடம் முன்மொழிவு சான்று கேட்டுள்ளார். முந்தைய கலெக்டர் ஜெயசீலன் இந்த திட்டம் நடக்காது என உத்திரவாதம் கொடுத்தும், தற்போது இவ்வாறு செய்வது நியாயமில்லை.ரவிச்சந்திரன், சாலைமறைக்குளம்: காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் 600 ஏக்கர் கரும்பு போட்டுள்ளனர். வழக்கமாக சிவகங்கை சர்க்கரை ஆலைக்கு தான் அனுப்புவர். தற்போது தஞ்சாவூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப நிர்பந்திக்கின்றனர். ஏற்கனவே வெட்டுக்கூலி அதிகமாக உள்ள நிலையில் போக்குவரத்து செலவு போன்ற சிக்கல்களை சந்திப்பர்.பழனிமுருகன், விருது நகர்: வடமலைக்குறிச்சி கண்மாயின் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.ஞானகுரு, மம்சாபுரம்: மாம்பழ பயிரை வேளாண் வணிகத்துறையின் இநாமில் முறையாக கொள்முதல் செய்யவில்லை. அனைத்து ரக மாம்பழங்களையும் கொள்முதல் செய்ய வேண்டும்.கருப்பையா, சாத்துார்: இருக்கன்குடி அணையில் நகரின் சாக்கடை கழிவுகள் கலக்கின்றன. வைப்பாறு, இருக்கன்குடி அணை இரண்டையும் சுத்தம் செய்ய வேண்டும்.ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: செண்பகவல்லி அணை உடைந்து கேரளாவிற்கு நீர் செல்வதால் நம் மாவட்ட வைப்பாறு சாக்கடையாகி விட்டது. அரசு இந்த அணையை மீட்டு விருதுநகர் மாவட்டத்தை வளமாக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை