காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் குழுவில் விவசாயிகள்
விருதுநகர் : காட்டுப்பன்றிகளை சுடும் அரசாணையை நிறைவேற்றும் வகையில் நியமிக்கப்படும் குழுக்களில் விவசாயிகளையும் உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்டத்தில் காட்டுப்பன்றி தொல்லை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 2025 ஜன. மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், காட்டுப்பன்றிகள் காப்பு காடுகளில் இருந்து 3 கி.மீ., தொலைவை தாண்டி வந்தால் வனத்துறையினர் சுடலாம் என அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த அரசாணையின் வழிகாட்டுதலில் ஒரு விதியாக வனவர், வி.ஏ.ஓ., ஊராட்சி மக்கள் பிரதிநிதி ஆகியோரை கொண்டு முதற்கட்ட குழுக்களை கிராமங்கள் தோறும், அடுத்தகட்டமாக வட்டார குழுக்கள், மாவட்ட குழு நியமிக்க வேண்டும். ஊரகக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் விவரம் விவசாயிகள் மத்தியில் சென்றடையவில்லை என்ற புகார் இருந்தது. இதற்கு எழுத்துப்பூர்வமாக விவசாயிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என வனத்துறை கூறினாலும், அது தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தாமல் இருந்தது. தற்போது வட்டார, மாவட்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகள் இல்லாமல் குழு அமைக்கப்படுகிறது. அரசாணையில் அவ்வாறு தான் உள்ளது என்றாலும், விவசாயிகள் தரப்பை பற்றிக் கூற ஒருவர் வேண்டியது அவசியம். திருச்சுழி குல்லம்பட்டி விவசாயி காளிமுத்து விளைநிலத்தை காட்டுப்பன்றி சேதப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார். ராஜபாளையம் வடகரை ஊராட்சி நரிக்குளத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். இது போன்று காட்டுப்பன்றியால் விவசாயிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே காட்டுப்பன்றியை சுடும் அரசாணையை தீவிரமாக செயல்படுத்த வேண்டிய தேவை விருதுநகர் மாவட்டத்தில் உள்ளதால் கலெக்டர் சிறப்பு கவனம் எடுத்து மாவட்ட குழுவில் விவசாய தரப்பையும் உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.