மழை, காட்டுப்பன்றியால் பருத்தி விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் வேதனை
விருதுநகர்: விருதுநகர் அருகே நந்திக்குண்டு, சுற்றிய பகுதிகளில் பருத்தி அறுவடையில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தவறியதாலும், காட்டுப்பன்றி தாக்குதலாலும் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையை தெரிவித்துள்ளனர்.விருதுநகர் அருகே உள்ள நந்திக்குண்டு, அதனை சுற்றிய பகுதிகளில் 200 ஏக்கருக்கு மேல் பருத்தி நடவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆடி மாதத்தில் மழையை நம்பி பருத்தி நடவு செய்யப்பட்டது. இம்மாதம், பங்குனி, ஆடி ஆகிய மூன்று மாதங்களில் அறுவடை செய்யப்படும்.ஒரு ஏக்கரில் நிலத்தை தயார்படுத்துதல், விதை, மருந்து, ஆட்கள் கூலி என ரூ.8 ஆயிரம் வரை செலவாகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் அறுவடையின் போது 6 குவிண்டால் வரை பருத்தி கிடைக்கும்.ஆனால் நடப்பாண்டு மழை முறையாக பெய்யாமல் போனது, காட்டுப்பன்றிகளின் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது ஒரு ஏக்கருக்கு 3 குவிண்டால் மட்டும் கிடைக்கிறது. மேலும் விதைகள் சரியானதாக இல்லாததால் ஓடுகள் படர்ந்து தரமான பருத்தி கிடைக்கவில்லை.விவசாயி வெள்ளைச்சாமி கூறியதாவது: எப்போதும் ஒரு கிலோவுக்கு ரூ. 60 விற்பனையாகும் பருத்தி, இந்தாண்டு ரூ.40க்கு விற்பனையாகிறது. இந்த விளைச்சல் பாதிப்பால் மொத்தமாக செலவழித்த தொகையில் பாதி கூட கிடைக்கவில்லை.அறுவடைக்கு ஆட்கள் கூலியாக ஒரு நபருக்கு ரூ. 300 கொடுக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கான போக்குவரத்து, டீ செலவு தனியாக ஆகிறது, என்றார்.