மாமரங்களில் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டார பகுதி மாமரங்களில் பரவலாக பூக்கள் பூக்க துவங்கி உள்ளதால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மா விவசாயிகள் உள்ளனர்.ராஜபாளையம் தாலுகாவில் மலையை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சேத்துார், தேவதானம், கணபதி சுந்தர நாச்சியாபுரம், சுந்தர்ராஜபுரம், ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பரப்பில் மா சாகுபடி பிரதானமாக நடந்து வருகிறது.மார்கழியில் துவங்கி தற்போது மாமரங்கள் அதிகம் பூக்க துவங்கியுள்ளன. இவை பிஞ்சு பிடித்து மே மாத தொடக்கத்தில் காய்கள் அறுவடைக்கு தயாராகும். இந்நிலையில் பூக்கள் உதிராமல் இருக்கவும் பூச்சி புழு தாக்குதலில் இருந்து காக்கவும் மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு விளைச்சலுடன் நல்ல விலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இது குறித்து விவசாயி பால ராஜா: கடந்த மூன்று வருடங்களாக பருவ நிலை மாறுபாடு காரணமாக பூமி செழிப்பினால் மா மர மகசூல் விவசாயிகளுக்கு கை கொடுக்கவில்லை. பிஞ்சு காலங்களில் சாரல் மழை, புழு தாக்குதல் போன்ற காரணங்களால் காய்கள் நிறம் இழந்தும், விளைச்சல் இருந்தும் தகுந்த விலை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மார்கழி தொடங்கி தற்போது பரவலாக மரங்களில் பூ பிடிக்கத் தொடங்கியுள்ளது. பூ உதிர்வை தடுக்க விவசாயிகள் மருந்து தெளித்து வருகின்றனர். விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.