ஒரே தாலுகாவில் அமையாத வன பீட்டுகள் நடைமுறை சிரமத்தில் வனத்துறையினர்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனச்சரக பீட்டுகள் ஒரே தாலுகாவில் அமையாமல், வெவ்வேறு தாலுகாவில் அமைந்துள்ளதால் வனத்துறையினர் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, வனச்சரக எல்லைகளை மாற்றி அமைக்க வருவாய் துறை, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமென வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டுர் ஆகிய நான்கு வனச்சரகங்களும் அதற்கு உட்பட்டு 40 பீட்டுகளும் உள்ளது. 485 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பக வனப்பகுதியில் வனச்சரகர்கள், வனவர், வன பாதுகாவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.4 வனச்சரகங்களின் பீட்டுகள் வெவ்வேறு தாலுகாவில் அமைந்துள்ளதால், விலங்குகளை வேட்டையாடும் சமூக விரோதிகள் எளிதில் தப்பி விடுகின்றனர், மேலும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலும் பதுங்கிக் கொள்கின்றனர். தினமும் 7 கிலோமீட்டர் தூரமே ரோந்து பணி செல்லும் வனத்துறையினரால், ஒட்டு மொத்த அளவில் வனத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. இது வனவிலங்குகளை வேட்டையாடும் சமூக விரோதிகளுக்கு வசதியாக அமைந்து விடுகிறது.ராஜபாளையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக பகுதியில் உள்ளது. இதேபோல் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள வ.புதுப்பட்டி வனச்சரக பகுதி, ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரகத்தில் தான் உள்ளது.வத்திராயிருப்பு வனச்சரகத்தில் சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கான்சாபுரம், பிளவக்கல் அணை பீட்டுகள், 35 கிலோமீட்டர் தூரமுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்ச ரகத்தில் உள்ளது. இதனால் மலைப்பகுதியில் வன வனவிலங்குகள் இறந்து கிடந்தால் ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை அலுவலர்கள் தான் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.வத்திராயிருப்பு தாலுகா எல்லைக்குள் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நுழைவு வாசல் வத்திராயிருப்பு வனச்சரகத்திலும், கோயில் சாப்டூர் வனச்சரகத்திலும் உள்ளது. மலையேறும் போது பக்தர்கள் இறந்து விட்டால் சாப்டூர் போலீசில் வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நிலை உள்ளது.இவ்வாறு வனச்சரகம் ஒரு தாலுகாவிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பீட்டுகள் வேறு வனசரகத்திலும் இருப்பதால் வனத்துறையினரும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிரமத்தை சந்தித்து வருவது, தொடர்கதையாகவே நீடிக்கிறது.எனவே மதுரை, விருதுநகர் மாவட்ட வருவாய் துறை வனத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சரியான திட்டமிடுதலுடன் வனச்சரக எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் என வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.