விவசாயத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் விடுங்க --ஒரே நாளில் வறண்டதால் எதிர்பார்ப்பு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நீண்ட நாள் கடும் வெயிலுக்கு பின் ஆற்றில் நீர் வரத்து இருந்த நிலையில் ஒரே நாளில் பாறைகள் தெரிந்ததால் விவசாயத்திற்கும் சிறிது தண்ணீர் திறந்து விட கோரிக்கை எழுந்துள்ளது.ராஜபாளையம் நகர் பகுதி சுற்றுலா தலமாக இருந்த அய்யனார் கோயில் ஆறு சுற்றுப்பகுதி விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வந்தது.மலைப் பகுதியில் லேசான மழை பொழிவு இருந்தாலே நீண்ட நாட்கள் தொடர்ந்து ஆற்றால் தண்ணீர் ஓடும். இவை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீரை நிரப்பி செல்லும். எனவே கண்மாய்களை சுற்றியிருந்த விவசாயிகள் மூன்று போகம் விளைவித்து வந்தனர்.இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் அருகே 6 வது மைல் நீர்த்தேக்கம் அமைத்தனர். இதன் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கு முன் அதே அளவு மீண்டும் ஒரு நீர்த்தேக்கம் அமைத்து ஆற்றில் இரண்டு தடுப்பணை மூலம் நீரை குடிநீர் தேக்கத்திற்கு திருப்பினர்.இதனால் விவசாயிகள் அதிக மழை பொழிவு ஏற்படும் காலங்களில் மட்டும் கண்மாய்களுக்கு தண்ணீரை எதிர்பார்த்து பயிரிடும் நிலைக்கு ஆளாகி உள்ளனர் .இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள்: பல தலைமுறைகளாக ஆற்று நீர் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த நிலை மாறி அதிக நீர் வராததால் தடுப்பணையை கடந்தால் தான் ஆற்றில் தண்ணீர் என்றாகி விட்டது. தடுப்பணைகள் கட்டியதில் இருந்து போராடி வருகிறோம். குடிநீர் தேவையை காரணம் கூறி எங்கள் பாசன உரிமை பறிக்கப்பட்டுள்ளது. முழுவதும் தண்ணீரை திருப்பாமல் ஒரு பகுதி விவசாயத்திற்காக ஆற்றிலும் தண்ணீரை திறந்து விட வேண்டும்.