உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடியும் நிலையில் அரசு கட்டடங்கள், தேங்கும் கழிவுநீர்

இடியும் நிலையில் அரசு கட்டடங்கள், தேங்கும் கழிவுநீர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் ஊராட்சியில் சேதமடைந்த பல அரசு கட்டடங்கள் இடியும் நிலையிலும், காலனியில் உள்ள தெருக்களில் வாறுகால் இன்றி கழிவுநீர் தேங்கும் அவல நிலையிலும் உள்ளது.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது சுக்கிலநத்தம் ஊராட்சி . இதில் 10 க்கும் மேற்பட்ட தெருக்களும், அம்பேத்கர் காலனி, நரிக்குறவர் காலனி, இந்திரா நகர், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. ஊராட்சியில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் ,கலையரங்கம், அங்கன்வாடி கட்டடம் ஆகியவை இடியும் நிலையில் உள்ளது. இவற்றை இடித்து விட்டு புதியதாக கட்ட வேண்டும். மெயின் ரோட்டிலிருந்து ஊருக்குள் செல்ல பேவர் பிளாக் கல் ரோடு 6 மாதங்களுக்கு முன்பு பதிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு முன்பு பெயர்ந்து விட்டது.அம்பேத்கர் காலனி, நரிக்குறவர் காலனி, ஆகிய பகுதிகளில் ரோடுகள் மோசமான நிலையில் உள்ளன. மெயின் ரோட்டில் இருந்து காலனிக்குள் வருவதற்கு முறையான பாதை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இங்கு கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி பல ஆண்டுகளாக தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சி பொருளாக இருந்தது. பின்னர் ஒரு ஆண்டாக தண்ணீர் வந்தது. மீண்டும் நிறுத்தப்பட்டது. தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர். தனியார் இடத்தில் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். அருப்புக்கோட்டையில் இருந்து சுக்கில நத்தம் வழியாக செல்லும் இருக்கன்குடி ரோடு பல பகுதிகளில் சேதமடைந்து உள்ளது. சுக்கிலநத்தம் பகுதி வழியில் உள்ள ரோடு பல இடங்களில் கிடங்காக உள்ளது. இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அன்னை இந்திரா நகரில் வாறுகால் இன்றி கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. ஊராட்சி அலுவலகம் முன்பு ரோடு, வாறுகால் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !