மேலும் செய்திகள்
சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, சேதமான மடைகள்
31-Oct-2024
விருதுநகர் ; விருதுநகர் அருகே குமிழங்குளம் கண்மாயில் நன்னீரில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுகிறது. கண்மாயை ஆழப்படுத்தி, கருவேல மரங்களை அகற்றி தேக்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் அருகே குமிழங்குளம் ஊராட்சி உள்ளது. இதன் கண்மாய் பெரியது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் மக்காசோளம், சிவப்பு சோளம், தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கண்மாயில் கழிவுநீர் கலப்பது அதிகரித்துள்ளது. எரிச்சநத்தம் குடியிருப்பு பகுதி ஓடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இதில் கலப்பதாக மக்கள் கூறுகின்றனர்.முன்பு இந்த கண்மாய் நீரை குளிப்பதற்கும், குடிப்பதற்கும் கூட மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பச்சை நிறமாகி பயன்படுத்த மக்கள் யோசிக்கின்றனர். துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் இவ்வாறு கழிவுநீர் கலப்பதால் கண்மாயின் மண் வளம் பாதிக்கப்படுவதோடு கிராமம் முழுவதுமே நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம் உள்ளது.கண்மாயின் மடை ஒன்று கடந்த ஆண்டு வங்கி நிதியின் மூலம் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை லீக் ஆவது தொடர்கிறது. கூடுதல் நிதி ஒதுக்கி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சரி செய்ய வேண்டும். கரை முழுவதும் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல கண்மாய் ஒரு பகுதியில் ஆழமாகவும், ஒரு பகுதியில் மேடாகவும் உள்ளது.மேடாக உள்ள பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. கண்மாய் முழுவதையும் ஒரே அளவில் ஆழப்படுத்தி கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கண்மாயில் கழிவுநீர் கலப்பது வேதனையாக உள்ளது. இது மண்வளத்தை பாதித்து பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயத்திற்கு இதன் நீரை பயன்படுத்த முடியாமல் போகும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். ஏற்கனவே கலந்ததை சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.- கோபாலகிருஷ்ணன், விவசாயி, குமிழங்குளம்.மடை பழுதாகி தண்ணீர் வெளியேறுகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் மண் போட்டு மூடி வைத்துள்ளோம். கனமழை பெய்து கண்மாயில் நீர்வரத்து ஏற்பட்டால் மீண்டும் மடை வழியாக தண்ணீர் வீணாக வாய்ப்புள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.- காளீஸ்வரன், முன்னாள் ராணுவ வீரர், குமிழங்குளம்.
கருவேல மரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றை அப்புறப்படுத்தி கண்மாயை ஆழப்படுத்த வேண்டும். கரைகளை உயர்த்த வேண்டும். கருவேல மரங்களால் கண்மாயின் நீர் வேகமாக வற்றி விடுகின்றன. அவற்றால் ஆபத்து தான்.- தர்மர், விவசாயி, குமிழங்குளம்.
31-Oct-2024