அமைச்சர் வருகைக்காக அவசரகதியில் மருத்துவமனை ரோடு பேட்ஜ் ஒர்க்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் ரோட்டில் ஆறு மாதங்களாக சீரமைக்கப்படாத பள்ளங்கள் அமைச்சர் கீதா ஜீவன் வருகைக்காக அவசர அவசரமாக பேட்ஜ் ஒர்க் பார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் கீதா ஜீவன் வந்தார். அதன் பின் பேராலி ரோட்டில் திருமண மண்டபத்தில் சர்வதேச முதியோர் தின கொண்டாடத்தில் பங்கேற்க அருப்புக்கோட்டை ரோட்டில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனை செல்லும் ரோட்டில் சென்றார்.இந்த ரோடு கடந்த ஆறு மாதங்களாக பள்ளங்களால் நிறைந்து இருந்தது. இவ்வழியாக தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக செல்பவர்கள், ஆம்புலன்ஸ் உள்பட நுாற்றாக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கம். இப்பகுதியில் சேதமான ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள், வாகன ஓட்டிகள் பல மாதங்களாககோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆனால் ஆலோசனைக்கூட்டம் முடித்து இவ்வழியாக முதியோர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் கீதா ஜீவன் செல்வார் என்பதால் அரசு மருத்துவனையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் ரோடு அவசர அவசரமாக பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டது.மாணவர்கள், நோயாளிகளின் நலன் குறித்து ஆறு மாதங்களாக அக்கறை இல்லாமல் இருந்த விட்டு அமைச்சர் வருகைக்காக ரோடு சீரமைக்கப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளி மாவட்ட அமைச்சர்கள் அடிக்கடி விருதுநகருக்குள் வந்து சென்றால் அனைத்து ரோடுகளும் சீரமைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.