குட்கா சோதனையில் இருக்கும் ஆர்வம் தடை பிளாஸ்டிக்கிற்கு அவசியம் சர்வ சாதாரணமாகும் விற்பனை, பயன்பாடு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில்தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க சோதனை, பறிமுதல் செய்வதில் காட்டும் ஆர்வத்தில் பாதியளவு கூட தடை பிளாஸ்டிக் சோதனையில் காட்டப்படுவதில்லை. இதனால் தடை பிளாஸ்டிக் விற்பனை, பயன்பாடு சர்வ சாதாரணமாக நடக்கிறது.மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் நகர், புறநகர், ஊரகப்பகுதியில் உள்ள கடைகள், சந்தேகத்திற்குரிய வாகன ஓட்டிகள், கோடவுன்களில் உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்த தனி குழுக்கள் தடை குட்கா பதுக்கல், விற்பனை, பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.இவற்றில் முதன் முறை தடை புகையிலை விற்பனை செய்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்குகடைக்கு சீல், 2வது முறை ரூ. 50 ஆயிரம் அபராதம், ஒரு மாதம் சீல், 3வது முறை கண்டறியப்பட்டால் ரூ. 1 லட்சம் அபராதம், மூன்று மாதங்கள் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.மேலும் ஒவ்வொரு மாதமும் சோதனையில் கண்டறியப்பட்ட அளவு, அபராதத்தொகை, சீல் செய்தகடைகள் எண்ணிக்கை ஆகியவற்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்ததோடு சேர்த்து பெரிய அளவில் பறிமுதல் செய்தது போன்ற செய்திகளை அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.ஆனால் மனித உயிருக்கும், மண், நீர்வளத்திற்கு எதிரான பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.குட்கா சோதனையில் ரோட்டில் வைத்து தனி நபர் பயன்படுத்தினால் கூட அபராதம் விதிக்கும் அதிகாரிகள், தடை பிளாஸ்டிக் விற்பனை செய்யும் பெரிய கடைகள், பயன்படுத்தும் உணவகங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.மேலும் உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்ற உணவகங்கள், கடைகளில் தடை பிளாஸ்டிக் பயன்பாடு படுஜோராக நடக்கிறது. இவற்றை கண்டறிந்து சில்லறை, மொத்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குட்கா மீது மட்டும் ஆர்வம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தும், மக்கள் பலரும் போதிய விழிப்புணர்வு இன்றி உணவகங்களில் இன்றும் தடை பிளாஸ்டிக் கவர்களில் சாம்பார், சால்னா, குருமா, ரசம் உள்ளிட்ட சூடான உணவுப்பொருட்கள், பார்சலுக்கு பிளாஸ்டிக் பேப்பர், மொத்தமாக கொண்டுச் செல்ல சிறிய, பெரியகேரி பேக்குகளில்கொடுக்கின்றனர்.எனவே மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்படும் தடை பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.